டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மோடி அலை ஒன்றும் வீசவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் செய்த தில்லுமுல்லு அலைதான் நாடுமுழுவதும் வீசி இருக்கிறது என ஆம் ஆத்மிகட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படு தோல்வியைச் சந்தித்து 2-ம் இடத்தைப் பிடித்தது. இது குறித்து துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது-

நாட்டின் ஜனநாயகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் செய்த தில்லுமுல்லு என்பது கசப்பான உண்மைதான். நான் கூறும் குற்றச்சாட்டை சிலர் நகைச்சுவையாக்கலாம், ஆனால், நாங்கள் உண்மையைப் பேசுவதில் இருந்து விலகி இருக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மோடி அலை அல்ல

மூத்த அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், “ டெல்லி நகரில் மோடி அலை ஒன்றும் வீசவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்  தில்லுமுல்லு அலைதான் வீசி இருக்கிறது. இதே போன்றஅலை உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்திலும் வீசியது. ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். வாக்காளர்களின் உரிமை காக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை பாஜனதா அழிக்க நினைக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லி தேர்தல் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான அல்கா லம்பா தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.