MBA Student suicide

எம்.பி.ஏ. மாணவி ஒருவர், தன் காதலருடன் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தபோதே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது. 

ஆந்திராவின் அனந்தப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹனிஷா சௌத்ரி (24) இவர் சிவானி மேலாண்மைக் கல்லூரியில் எம்.பி.ஏ. பயின்று வந்துள்ளார். ஐதராபாத் அருகில் உள்ள கோம்பாளி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஹனிஷா சௌத்ரி தங்கியுள்ளார். 

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று விடியற்காலை ஹனிஷா, தனது காதலர் தீக்சித் பாட்டில் உடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு மனவேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஹனிஷா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதலியின் மரணத்தை வீடியோ கால் மூலம் பார்த்த தீக்சித், ஹனிஷா தங்கியுள்ள விடுதிக்கு சென்று பார்த்துள்ளார். ஆனாலும் ஹனிஷாவை காப்பாற்ற முடியவில்லை. 

மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து, விடுதி நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தது. பின்னர் அங்கு வந்த போலீசார் ஹனிஷாவின் உடலை மீட்டு செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

ஹனிஷா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். ஹனிஷாவின் மரணம் குறித்து அவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.