நாகாலாந்து மாநிலம் திமாபூர் அருகே நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது பாறை மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்

நாகாலாந்து மாநிலம் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே அமைந்துள்ள சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது மலையில் இருந்து உருண்டு வந்த பெரிய பாறை மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு கார்கள் சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.

விபத்தில் சிக்கியவர்களின் அடையாளம் இதுவரை காணப்படவில்லை. கனமழையினால், மலையில் இருந்த பாறை உருண்டு வழுந்து விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் அருகில் இருந்த வாகனத்தில் உள்ள டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சையின் போது மற்றொருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 3 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

Scroll to load tweet…

;

விபத்து நிகழ்ந்த பகுதி அபாயகரமான பகுதி என்று அழைக்கப்படுகிறது. நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகளும் அந்த இடத்தில் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. கார்கள் மீது பாறை மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் நிரந்தர ஆபத்து இருப்பதை ஒப்புக்கொண்ட முதல்வர் நெய்பியு ரியோ, நெடுஞ்சாலையில் உள்ள பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இதில் மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) உடனடி நடவடிக்கை எடுக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Scroll to load tweet…

குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது என்ற அவர், இதுபோன்ற அபாயகரமான பகுதிகளில் அத்தியாவசிய பாதுகாப்பு உள்கட்டமைப்பை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். குடிமக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.