இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கியதும் எதிர்கட்சியினர் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையும், மக்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து 12 மணிக்கு மேல் மீண்டும் மாநிலங்களவை கூடியது. இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இதில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பழைய ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர்,
பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்படும் விளைவுகளை மத்திய அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பால் மக்களுக்கு இன்னல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டிப்பதாக தெரிவித்தார்.
மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 50 நாள் அவகாசம் குறைவானது. மோசமான நிர்வாகத்துக்கு ரிசர்வ் வங்கி எடுத்துக்காட்டாக மாறிவிட்டது என்றும், ரூபாய் விவகாரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழலை அரசு நிகழ்த்தியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், கூட்டுறவு சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தர மோடி நடவடிக்கை எடுப்பார் என நமபுவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.
