man who attacked rahul car arrested

குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது கல்வீசிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். பனஸ்கந்தா மாவட்ட பாஜக நிர்வாகி ஜெயேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட நேற்று குஜராத் சென்றார். அப்போது, பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்.

இதையடுத்து தனேரா நகரில் அவர் வெள்ளச் சேதங்களை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது அங்கு சிலர் ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சிலர் திடீரென ராகுல் காந்தி கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ராகுல் காந்தியின் கார் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குஜராத்தில் ராகுல் கார் மீது கல் வீசிய பனஸ்கந்தா மாவட்ட பாஜக நிர்வாகி ஜெயேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.