Asianet News TamilAsianet News Tamil

ஜி.எஸ்.டி.யின் வெற்றி, சரித்திர சாதனை படைத்துள்ளது பிரதமர் மோடி பெருமிதம்

Man ki bath.....prime minister modi speech
Man ki bath.....prime minister modi speech
Author
First Published Jul 30, 2017, 9:41 PM IST


ஜி.எஸ்.டி.யின் வெற்றி, சரித்திர சாதனை படைத்துள்ளது
பிரதமர் மோடி பெருமிதம்

ஜி.எஸ்.டி. வரித்திட்டத்தை அமல்படுத்திய ஒரு மாதத்திற்குள் ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, ‘‘ஜி.எஸ்.டி.யின. வெற்றி சரித்திர சாதனை படைத்து இருப்பதாக’’ பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திரமோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் (மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி நேற்று காலை அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது-

எப்போதெல்லாம் நான் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக என்னைத் தயார் படுத்திக் கொள்கிறேனோ, அப்போதெல்லாம் நம் தேசத்தின் மக்களும் அதற்கான தயாரிப்பு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை என்னால் காண முடிகிறது.

இந்த முறை சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக ஏராளமான கடிதங்களும், தொலைபேசி அழைப்புக்களும் வந்திருக்கின்றன; இப்போதும் கூட மக்கள் இந்த சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.எதிர்பார்ப்புக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

சரக்கு மற்றும் சேவை வரி அமல் செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகி இருக்கிறது, அதன் பலன்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஏழைகளுக்குத் தேவையான பொருள்களின் விலை குறைந்திருக்கிறது.

மலிவு விலையில் அவை கிடைக்கின்றன என்று ஒரு ஏழை எனக்குக் கடிதம் எழுதும் போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வடகிழக்கில், தொலைவான மலைப் பிரதேசங்களில், காடுகளில் வசிக்கும் ஒரு குடிமகன், முதலில் ஜி.எஸ்.டி. பற்றி பயமாக இருந்தது, இது என்ன என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது நான் கற்றுக் கொண்ட பின்னர், முன்பை விட வேலை சுலபமாக ஆகி விட்டது, வியாபாரம் சுலபமாகி விட்டது என்று கடிதம் வரையும் போது சந்தோஷமாக இருக்கிறது.

மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நுகர்வோருக்கு வியாபாரிகள் மீதான நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது. போக்குவரத்து மற்றும் சேவைகள் துறையில் எப்படி இந்தப் புதிய வரியமைப்பு முறை தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் காண்கிறேன்.

எப்படி டிரக்குகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது, எத்தனை விரைவாக சென்று சேர முடிகிறது, நெடுஞ்சாலைகள் எப்படி தங்குதடையின்றி இருக்கின்றன என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

முதலில் இருந்த தனித்தனி வரிக்கட்டமைப்பு காரணமாக, போக்குவரத்து மற்றும் சேவைத் துறையின் பெரும்பான்மை வளஆதாரங்கள், ஆவணங்களைப் பராமரிப்பதிலேயே கழிந்து வந்தன.

ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுக்கென புதிய புதிய கிடங்குகள் ஏற்படுத்த வேண்டியிருந்தது ‘குட் அண்டு சிம்பிள் டேக்ஸ் என்று நான் கூறும் இந்த சரக்கு மற்றும் சேவைவரி, உண்மையிலேயே நமது பொருளாதார அமைப்பு மீது மிகவும் ஆக்கபூர்வமான தாக்கத்தை, மிகக் குறைந்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

ஜி.எஸ்.டி.யை அமல் செய்ததில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கும் இருக்கிறது, பொறுப்பும் இருக்கிறது. அனைத்து முடிவுகளும் மாநிலங்களும் மத்திய அரசுமாக இணைந்து ஒருமித்த வகையிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதன் விளைவு தான், ஒவ்வொரு அரசுக்கும் இருந்த முதன்மை நோக்கம் – அதாவது இந்த ஜி.எஸ்.டி. காரணமாக ஏழையின் உணவுக்கு அதிக செலவு ஆகக் கூடாது என்பது தான்.

ஜி.எஸ்.டி. பாரதத்தின் சமூக சக்தியின் வெற்றிக்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றி, சரித்திர சாதனை.

இது வரி சீர்திருத்தம் மட்டுமல்ல, ஒரு புதிய, நேர்மையான கலாச்சாரத்துக்கு பலம் கூட்டும் பொருளாதார முறை. இது ஒருவகையில் சமூக சீர்திருத்த இயக்கமும் கூட.

இத்தனை பெரிய முயற்சியை மிக இயல்பான வகையில் வெற்றியடையச் செய்த கோடானுகோடி நாட்டுமக்களுக்கும், என் கோடானுகோடி வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்’’.

ஜி.எஸ்.டி. செயலி வாயிலாக குறிப்பிட்டதொரு பொருளின் விலை இந்த வரியமைப்புக்கு முன்பாக எத்தனை இருந்தது, புதிய வரியமைப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பது எல்லாம் உங்கள் மொபைல் போனிலேயே கிடைத்து விடுகின்றன.ஒரு தேசம், ஒரு வரி என்ற மிகப்பெரிய கனவு மெய்ப்பட்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி. விஷயத்தில் நான் பார்த்தது என்னவென்றால், தாலுகா முதல் மைய அரசு வரையிலான அனைத்து அரசு அதிகாரிகளும் கடுமையாக அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்தார்கள். ஒரு வகையான நேசமான சூழ்நிலையை அரசுக்கும் வியாபாரிகளுக்கும் இடையேயும், அரசுக்கும் நுகர்வோருக்கு இடையேயும் ஏற்படுத்துவதில் மிகப்பெரிய பங்குபணியாற்றினார்கள்.

இந்தச் செயலில் ஈடுபட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும், மைய, மாநில அரசுகளின் அனைத்துப் பணியாளர்களுக்கும் நான் என் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios