நாடு முழுவதும் கடந்த மாதம் முதல் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்கத்தில் குறிப்பாக கடந்த மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான காலத்தில் நடந்த போராட்டங்களின் போது கலவரம் வெடித்தது. வன்முறையாளர்கள் ரயில்வே உள்ளிட்ட பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.

இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், ரயில்வேக்கும் இழப்பீடு வேண்டி கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. மேற்கு வங்கத்தில் ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கிழக்கு ரயில்வே ஆவணம் ஒன்றை தாக்கல் செய்தது. 

அதில், மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் 13-15ம் தேதிகளில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தின் போது வெடித்த கலவரத்தால் ரயில்வேயின் ரூ.72.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் நாசம் அடைந்தன என தெரிவித்துள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தென் கிழக்கு ரயில்வே தனியாக தாக்கல் செய்த ஆவணத்தில், வன்முறையாளர்களால் ரயில்கள், நிலையங்கள் மற்றும் இருப்புபாதை உள்பட மொத்தம் ரூ.12.75 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கு 4 வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என  நீதிமன்றம் உத்தரவிட்டது.