தமிழ் நாட்டில் இரண்டு சூப்பர் ஸ்டார்களும் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், சேர நாட்டிலும் சூப்பர் ஸ்டார்களை அரசியலில் வளைக்கும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. 

மோகன்லாலை வளைக்க பாஜக எடுத்த முயற்சிகள் விழலுக்கு இரைத்த நீராகிபோன நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மம்முட்டிக்கு நூல் விட்டுக் கொண்டிருக்கிறது. கேரளாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மோகன்லாலை பாஜக வளைக்க பார்த்ததைபோல இன்னொரு சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி மீது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பார்வையைத் திருப்பியிருக்கிறது. 

நடிகர் மம்முட்டி இடதுசாரி சிந்தனை உள்ளவர் என்ற பார்வை கேரளாவில் உள்ளது. இதை மனதில் வைத்து கம்யூனிஸ்ட் சார்பில் மம்மூட்டியை அணுகிவருவதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் மம்மூட்டியை ஒரு தொகுதியில் நிற்க வைக்கவும் கம்யூனிஸ்ட் முயற்சி மேற்கொண்டுள்ளது. கேரள வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன் மம்மூட்டிக்கு நெருங்கிய நண்பர் என்பதால், அவர் மூலமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 

ஆனால், கம்யூனிஸ்ட்டின் இந்த முயற்சிக்கு மம்மூட்டி தற்போது முட்டுக்கட்டைப் போட்டுவிட்டார்.  “நான் 38 ஆண்டுகளாக சினிமாவில்தான் அரசியல் செய்துவருகிறேன். என்னால் நிஜ அரசியலில் சேர முடியாது. நிஜ அரசியலில் சோ்ந்தால் சினிமா அரசியல் என்னை வீட்டுக்கு அனுப்பி விடும்” என்று அரசியல் அழைப்புக்கு பதில் கூறியிருக்கிறார். 

அரசியல் அழைப்பை மம்மூட்டி மறுத்திருந்தாலும், அவர் மீது தோழர்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஏற்கனவே நடிகர் மோகன்லாலை வளைக்க பாஜக முயற்சி மேற்கொண்டது. அவரும் பாஜகவின் அழைப்பை நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.