மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியினர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கொண்ட அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அனைவரையும் அழைத்து இருந்தார். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த கூட்டத்தை புறக்கணித்தார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சியினர் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களை கொண்ட கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும்படி, அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த கூட்டத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது, 2022ம் ஆண்டு 75வது சுதந்திர தின விழா கொண்டாடுவது, இந்தாண்டு மாகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால், இன்று நடைபெறும், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில், பங்கேற்கவில்லை என மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து, மக்களவை விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது. 

மக்களவை மற்றும் சட்டமன்றத்துககு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, உடனடியாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. அதுபற்றி, அரசியல் சாசன நிபுணர்கள், தேர்தல் நிபுணர்கள் ஆகியோரை கலந்து ஆலோசிக்க வேண்டும். அதன்பின், முடிவு செய்ய முடியும். எனவே, அது பற்றி அவசரமாக முடிவு எடுக்காமல், அனைத்து கட்சிகளுக்கும், மத்திய அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும். அதுபற்றி அனைத்து கட்சிகளின் கருத்தை அறிந்து, அதன்பின்  ஒரு முடிவுக்கு வருவதே, சரியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.