'நாட்டின் மிகப் பெரிய ஊழல் ரஃபேல் ஊழல்தான். பிரதமர் மோடி ஊழல்களுக்கொல்லாம் மாஸ்டர்' என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாகக் குற்றம்சாட்டிய நிலையில், ‘மேற்கு வங்காள மண்ணை மம்தா களங்கப்படுத்தி விட்டார். சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளை பாதுகாப்பவர்களை இந்தக் காவலாளி சும்மா விட மாட்டான்’ என்று பிரதமர் மோடி பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சூராபந்தர் என்ற ஊரில் பேசிய மோடி, மம்தாவை கடுமையாகத் தாக்கி பேசினார். மோடி பேசிய பேச்சின் சாரம்சம் இதுதான்: இடதுசாரிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தவர்களும் அதே வன்முறையைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மேற்கு வங்காள மண்ணை களங்கப்படுத்தி விட்டார்கள். லட்சக்கணக்கான ஏழை மக்களின் பணத்தை கொள்ளையடித்த மோசடி பேர்வழிகளைப் பாதுகாக்க மாநிலத்தின் முதல்வர் தர்ணா போராட்டம் நடத்தியது, இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.

  

என்ன செய்தாலும் இந்தக் காவலாளி, சாரதா நிதி நிறுவன ஊழல்வாதிகளையும் அவர்களை பாதுகாப்பவர்களையும் தப்ப விடமாட்டான்” என்று மம்தாவை குறி வைத்து மோடி தாக்கி பேசினார். மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சட்டீஸ்கர் சென்ற மோடி, அங்கே காங்கிரஸ் கட்சியைத் தாக்கி பேசினார். “விவசாய கடனை தள்ளுபடி செய்வதாகப் பொய்ச் சொல்லி, சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

 

ஆனால், கூட்டுறவு, கிராமப்புற வங்கிகளில் பெற்ற கடன்களை மட்டும் காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி பெற தகுதி இருக்கா இல்லையா? அடகுகடைக்காரர்களிடமும் உறவினர்களிடமும் பெற்ற கடன்களை யார் தள்ளுபடி செய்வது? மெகா கூட்டணி என்ற பெயரில் கலப்பட கூட்டணியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இந்திரா காந்தி குடும்பத்தில் இருப்போர் ஒன்று ஜாமீனில் இருக்கிறார்கள் அல்லது முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள்” என்று காங்கிரஸை கிண்டல் செய்து பேசினார்.