என் உயிரே போனாலும்  மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் துணை போகமாட்டேன்  என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா என்ற அமைப்பு கடந்த 48 நாட்களாக காலவரையற்ற தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் என் உயிரை கொடுக்கவும் தயார், ஆனால் என் மாநிலம் பிரிவதற்கு துணை போகமாட்டேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறும்போது ‘‘என்ன நடந்தாலும், நான் எனது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், மாநிலம் பிரிவதற்கு ஒருபோதும் துணையாக இருக்கமாட்டேன். ஒவ்வொரு மாவட்டமும் எங்களுடைய சொத்து. ஒவ்வொரு மதத்தினரும், ஜாதியினரும் இங்கே இருப்பார்கள்.இது இந்தியா. அதை பாதுகாப்பது நமது கடமை. அதை பிரிக்க முடியாது. 

மேற்கு வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களையும் விரும்புவதுபோல், டார்ஜிலிங்கையும் நான் விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதிதான் டார்ஜிலிங் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். வருங்காலத்திலும் அப்படித்தான் இருக்கும்.

டார்ஜிங் பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப விரும்புகிறேன். தேயிலை தோட்டம் வேலை மீண்டும் தொடங்க வேண்டும். டார்ஜிலிங் தேயிலை உலகத்தரம் வாய்ந்த பிராண்ட். அதை கெடுத்துவிடக்கூடாது’’ என்றார்.