அக்டோபர் 31இல் ஆஜராக முடியாது; வேற வேலை இருக்கு: மஹுவா மொய்த்ரா!
நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு சம்மன் அனுப்பிய தேதியில் ஆஜராக முடியாது என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அவர் அனுப்பிய புகார் கடிதத்தில், அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருப்பதாகக்கூறி, நாடாளுமன்ர ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜெய் அனந்த் டெஹாத்ராய் மற்றும் பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே ஆகியோரின் வாக்குமூலத்தை நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேற்று பதிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வருகிற 31ஆம் தேதி நேரில் ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களின் உதவியைப் பெறுவோம் என்று நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரும், பாஜக எம்பியுமான வினோத் குமார் சோங்கர் தெரிவித்திருந்தார்.
சத்தீஸ்கர் தேர்தல்: முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தும் காங்கிரஸ்!
இந்த நிலையில், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு சம்மன் அனுப்பிய தேதியில் ஆஜராக முடியாது என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். “நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் எனக்கு மாலை 7.20 மணிக்கு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு முன்பு தொலைக்காட்சி நேரலையில் 31ஆம் தேதி ஆஜராக எனது சம்மன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து புகார்களும், தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. எனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட தொகுதி நிகழ்ச்சிகள் நவம்பர் மாதம் 4ஆம் தேதி வரை உள்ளன. அது முடிவடைந்த உடன், நவம்பர் 5ஆம் தேதி உடனடியாக ஆஜராக ஆவலுடன் இருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருக்கு அவர் கடிதமும் அனுப்பியுள்ளார்.