நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு மகாராஷ்டிரா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு மகாராஷ்டிரா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக அண்மையில் செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கலந்துக் கொண்டார். அப்போது நுபுர் சர்மா, நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முகமது நபிகள் மற்றும் இஸ்லாம் மதத்துக்கு எதிரான தவறான மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாகவும் நுபுர் சர்மாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது.

அதேசமயம், நுபுர் சர்மா விவகாரம் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை அடுத்து தொலைக்காட்சி விவாதத்தின்போது முகமது நபியை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை பாஜக தலைமை அதிரடியாக இடைநீக்கம் செய்தது. மேலும் நுபுர் சர்மா பேசிய வீடியோவை பகிர்ந்த டெல்லி பாஜகவின் ஊடக பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டாலையும் பாஜக இடைநீக்கம் செய்தது.

நுபூர் சர்மாவின் கருத்துக்கு விளக்கம் அளிக்க கோரி கத்தார், அபுதாபி உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியிருந்தன. இதேபோல் 15 முஸ்லீம் நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த விவகாரம் தொடர்பாக வாருகிற 22 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு மகாராஷ்டிரா காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா காவல்துறை அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வருகிற ஜூன் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது குறித்து வாக்குமூலம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.