மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்போதிலும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டாம் என துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்போதிலும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டாம் என துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெருமளவில் கொரோனா தொற்றும் உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் அதிக அளவு தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 18,466 புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இந்த பாதிப்பு முந்தைய நாளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 6,303 எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 20 இறப்புகள் ஏற்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 67,30,494 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,41,573 ஆகவும் உள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மாநில அமைச்சர் ராஜேஷ் தோப் கூறுகையில் கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம், மருத்துவமனையில் படுக்கையில் தங்கும் இடம் மற்றும் ஆக்சிஜன் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் பற்றிய முடிவுகளை அரசு எடுக்கும். தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் தேவை 700 மெட்ரிக் டன்களைத் தாண்டினால், மாநிலம் தானாகவே ஊரடங்கு போடப்படும்’’ என்று கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 653 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மாநிலத்தில் மொத்த பாதித்தவர்களில் இதுவரை 259 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 394 பேர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே தினசரி கொரோனா தொற்று அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.