மகாராஷ்ராவில் யாரும் ஆட்சி அமைக்க முன்வராத நிலையில், ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி ஆகிய பிரச்சனைகளில் உடன்பாடு எட்டாததால் அங்கு அரசு அமைவதில் இரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்தது. இதனையடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யா அழைப்பு விடுத்தார். ஆனால், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை தங்களிடம் இல்லை என பாஜக ஆளுநரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 

இதையடுத்து, இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள சிவசேனாவை ஆட்சி அமைக்குமாறு மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளதால் கூடுதல் கால அவகாசத்தை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இவர்களது கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆளுநர்  நேற்றிரவு 8.30 மணியளவில் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்களும் ஆட்சியமைப்பு தொடர்பாக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், மகாராஷ்டிராவில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்தும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார். அதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கிய தகவல் வெளியானது.

இதனையடுத்து, மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் அளித்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.