தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பாஜக தலைமையிலான ஆட்சி நேற்று காலை அமைந்தது.  முதல்வராக தேவேந்திர பட்னாவிசும்,  துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், சிவசேனா, தேசிய காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அவசர அவசர சரத் பவார் இது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் முடிவு இல்லை என்றார். 


 
பின்னர், பாஜகவுக்கு ஆதரவளித்ததால அக்கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று இரவு அஜித் பவாரை சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு பாஜக எம்.பி. சஞ்சய் காகடே சென்றுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.பி.யான சஞ்சய் காகடே இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு நேரில் சென்றார். கடைசி நேரத்தில் அஜித் பவார் பாஜக உடன் கைகோர்த்த நிலையில் சரத்பவாரை சமரசம் செய்ய முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.