மகாராஷ்டிரா புதிய அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ஃபார்முலா போன்று நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும் சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதனிடையே, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் செய்தி வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சிவசேனா எம்.எல்.ஏ.க்களை 2 நாட்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்க அக்கட்சி தலைமை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே வீட்டிற்கு அருகில் உள்ள சொகுசு விடுதி அவர்கள் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக தலைவர்கள் குழு ஆளுநரை சந்தித்தது. இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிராவில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் விளக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் முந்தைய பாஜக அரசின் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் களத்தில் அதிரடி திருப்பங்கள் நிலவி வருகிறது.