மேற்கு இந்தியாவில் முதன்முறையாக நவி மும்பையில் வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலைக் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான கடிதத்தை மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே வழங்கினார்.
மேற்கு இந்தியாவில் முதன்முறையாக நவி மும்பையில் வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலைக் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான கடிதத்தை மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே வழங்கினார். முன்னதாக தாக்கரே, புகழ்பெற்ற கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் ஒதுக்கீடு கடிதத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சி.இ.ஓ தர்மா ரெட்டியிடம் வழங்கினார். அப்போது, திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் மிலிந்த் நர்வேகர், யுவ சேனா தலைவர்கள் ராகுல் கனல் மற்றும் சூரஜ் சவான் மற்றும் ஆந்திராவை தளமாகக் கொண்ட கோவில் அறக்கட்டளையின் மற்ற உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். மகாராஷ்டிரா மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் பயனடையும் வகையில் நவி மும்பையில் கோயிலுக்கு நிலத்தை ஒதுக்கும் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) அரசின் முடிவிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே ஐதராபாத், சென்னை, கன்னியாகுமரி, பெங்களூரு, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், ஜம்மு, புது தில்லி, குருக்ஷேத்ரா மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் கோயில்களைக் கட்டியுள்ளது. மேலும் நவி மும்பையில் வரப்போவது மேற்கு இந்தியாவில் முதல் முறையாகும். பிப்ரவரி 2022ல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அமைச்சரவை, திருப்பதி கோயிலின் பிரதியை கட்டுவதற்காக, வரவிருக்கும் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புக்கு அருகில் உள்ள உல்வேயில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்தது. இதை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் மகாராஷ்டிரா அரசு புதிய கோயில் கட்டுமானம்த்தை அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கிறது. பக்தர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக இது மாறும் என்றும் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

சுமார் 850 மீட்டர் உயரமுள்ள திருமலை மலையின் 7வது சிகரத்தில் அமைந்துள்ள திருப்பதி கோயிலுக்கு ஆண்டுதோறும் சராசரியாக மூன்று முதல் நான்கு கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். மக்களின் காணிக்கை மற்றும் நன்கொடைகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் ரூ. 3,000 கோடி சேகரிக்கப்படும் வருவாய் அடிப்படையில் இது உலகின் பணக்காரக் கோவிலாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ சஞ்சீவ் சரின், ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் எம்.டியுமான ஸ்ரீ கெளதம் சிங்கானியா சார்பாக, கோயில் கட்டுவதற்கான முழு செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். கோவிலின் கட்டுமானத்திற்கான முழு செலவையும் ஏற்க முன்வந்ததற்காக ரேமண்ட் தலைவர் ஸ்ரீ சிங்கானியாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
