மதுரையில் 3 முறைக்கு மேல் விதிகளை மீறும் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் ஓட்டுனர் மற்றும் 3 பயணிகள்மட்டும் பயணம் செய்ய வேண்டிய ஆட்டோக்களில் இருக்கை மாற்றம் செய்து பத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், பேருந்துகளை போல் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றியும், இறக்கி விட்டும் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுகுறித்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரில் ஆஜராகி பதில் மனுதாக்கல் செய்தனர்.

அதில் விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோக்களிடமிருந்து 10 லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமாக வசூலிகப்பட்டுள்ளதாகவும், விதிமீறலில் ஈடுபட்ட ஆயிரத்து 427 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும், ஆயிரத்து 333 ஆட்டோக்களின் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து 3 முறைக்கு மேல் விதிகளை மீறினால் ஆட்டோக்களின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.