நம் ஊரில் கவுன்சிலர் ஆனாலே படோடபம் வந்துவிடும். கோடிகள் புரளும். குவாலீஸ் கார்கள் புழுதி பறக்கும். இதுபோன்றவர்களுக்கு மத்தியில் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து வரும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு ஊர் மக்களே சேர்ந்து வீடு கட்டிக் கொடுக்க பணம் திரட்டிவரும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

பரம ஏழையாக இருக்கும் இந்த எம்.எல்.ஏ. எந்த ஊர் என்றுதானே நினைக்கிறீர்கள்? மத்தியப் பிரதேசத்தின் விஜய்ப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. சீதாராம்தான் அவர். பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த எம்.எல்.ஏ. பாஜகவைச் சேர்ந்தவர். ஏற்கனவே இரண்டு முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால், மக்கள் மத்தியில் இவருக்கு நல்லப் பெயர் இருந்ததால், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலிலும் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்புக் கொடுத்தது. 

வேட்புமனுவில் 600 சதுர அடியில் குடிசை வீடு, இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகவு, மொத்த ரொக்கம் 46 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த முறை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசதிப்படைத்த வேட்பளாரான ராம்நிவாஸ் ராவத்தை தோற்கடித்து முதன் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். எம்.எல்.ஏ. பதவி ஏற்ற பிறகு எந்த அதிகார தோரணையும் காட்டாமல், தனது மண் குடிசை வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார் இவர். 

எம்.எல்.ஏ ஆகிவிட்ட நிலையில், பொதுமக்கள் அதிகம் நாடி வருவார்கள் என்பதால், புதிய வீடு கட்ட கட்சி  நிர்வாகிகள் சீதாராமை வலியுறுத்தி வந்தனர். தன் நிலைமையை எடுத்துரைத்து வீடு கட்டுவதை மறுத்து வந்தார் சீதாராம். இதனால் கட்சி நிர்வாகிகள், அப்பகுதி கிராம மக்கள், அவரது ஆதரவாளர்கள் சீதாராமுக்காகப் பணம் திரட்ட முடிவு செய்தனர். இதன்படி வீடு கட்ட பணம் திரட்டி வருகிறார்கள். எம்.எல்.ஏவாக உள்ள சீதாராமுக்கு இந்த மாதம்தான் முதல் மாத ஊதியமே வரவுள்ளது. 

தேர்தல் வாக்குறுதியில், தனது எம்.எல்.ஏ. சம்பளத்தை தொகுதி மக்களுக்கு செலவு செய்வதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். தற்போது அந்த ஊதியத்தை வீடு கட்ட வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி நெகிழ வைத்துள்ளனர் மக்கள். மக்கள் தந்த ஆதரவால், தற்போது புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்கியுள்ளார் எம்.எல்.ஏ சீதாராம். இப்படியும் ஒரு எம்.எல்.ஏ!!!