கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச் 25ம் தேதியிலிருந்து தேசியளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. 

நான்காம் கட்ட ஊரடங்கி மத்திய அரசு, தளர்வுகள் செய்துள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவை இன்றிலிருந்து தொடங்கும் என ஏற்கனவே விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது. விமான போக்குவரத்து தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் மட்டும் விமான சேவைக்கு அனுமதி வழங்காததால் அந்த மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு இடையேயான விமான சேவை இன்று தொடங்கியது. ஏராளமானோர் இன்றைய பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். 

2 மாதங்களுக்கு பிறகு இன்று உள்நாட்டு விமான சேவை தொடங்கிய நிலையில், முதல் விமானம் காலை 4.45 மணிக்கு டெல்லியிலிருந்து புனேவுக்கு புறப்பட்டது. மும்பையிலிருந்து முதல் விமானம் காலை 6.45 மணிக்கு பாட்னாவுக்கு புறப்பட்டது.

ஆனால் போதுமான பயணிகள் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் டெல்லிக்கு வர வேண்டிய 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானங்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு விமான நிலையங்களுக்கு வந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.