கடந்த 2015 - 2016 கணக்கின்படி மத்திய அமைச்சர்கள் கையில் வைத்துள்ள பணம் குறித்த பட்டியல் தற்போது கிடைத்துள்ளது. அந்த பட்டியலில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி முதலிடம் பிடித்துள்ளார். அவரிடம் ரூ.65 லட்சம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சாமானிய மக்கள் பணமின்றி தத்தளிக்கின்றனர், கிராமவாசிகளிடம் சென்று பிரதமரும், அருண் ஜேட்லியும் இ-வேலட், ஆன் லைன் வர்த்தகம், பணமில்லா சமுதாயத்தை நோக்கி முன்னேறுவோம் என கூறி வருகின்றனர். இந்தவேளையில், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உட்பட அமைச்சர்களிடம், தற்போது பெரிய அளவில் பணம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிரபல ஆங்கில நாளிதழ், காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் தகவல்களின்படி, தற்போது பதவியில் இருக்கும் 76 அமைச்சர்களில் 40 பேர் தங்களிடம் உள்ள பணம் எவ்வளவு என்பதை வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசு, கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 தடை செய்த நடவடிக்கையால் நாட்டில் மக்கள் 22 நாட்களாக வங்கிகளின் வாசலில் தவமிருந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று சோர்ந்ததுதான் மிச்சம். கைக்கு பணம் கிடைப்பதில்லை. இந்த வரிசைகளில் தொழிலதிபர்களோ, கறுப்பு பண முதலைகளோ, அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ நிற்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2015 - 2016 கணக்கின்படி அமைச்சர்கள் கையில் வைத்துள்ள பணவிவரம் கிடைத்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டது குறித்து தினமும் ஒவ்வொரு விதமான அறிக்கைகளை வெளியிடும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவரிடம் ரூ.65 லட்சம் உள்ளது.

மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் எசோ நாயக் (சுயேச்சை) ரூ.22 லட்சம், மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாகவும் வைத்திருக்க, பிரதமர் மோடி தன்னிடம் ரூ.89,700 ரொக்கம் இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

23 அமைச்சர்கள் தங்களிடம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 15 அமைச்சர்களிடம் 2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் உள்ளது.