பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராக ராகுல் காந்தி பரிந்துரை!
பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராக ராகுல் காந்தி எம்.பி.யின் பெயரை மக்களவை சபாநாயகர் பரிந்துரை செய்துள்ளார்
மோடி பெயர் சர்ச்சை அவதூறு வழக்கில் நாடாளுமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட கேரள மாநிலம் வயநாடு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர் பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸிலிருந்து இருவர், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளில் இருந்து தலா ஒருவர் என நான்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை வெவ்வேறு நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு சபாநாயகர் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி, பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராக ராகுல் காந்தி எம்.பி.யின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு வரை அவர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் அமையும் இந்தியாவின் முதல் ட்ரோன் பொது சோதனை மையம்!
காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி மற்றும் டாக்டர் அமர் சிங் ஆகியோர் பாதுகாப்பு நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்.பி சுஷில் குமார் ரிங்கு விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான நிலைக்குழுவுக்கு தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யான பைசல் பிபி முகமதுவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நிலைக்குழு உறுப்பினர்கள் வருடாந்தர அறிக்கைகள் மற்றும் மானியங்களுக்கான கோரிக்கைகளை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அவையால் பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்களை ஆய்வு செய்வர். இந்தக் குழுக்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அன்றாட நிர்வாக விஷயங்களை கருத்தில் கொள்வதில்லை.
நீண்ட கால திட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தின் பணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நீண்டகால தேசிய நலனை கருத்தில் கொண்டு இந்த குழுக்கள் பரந்த கொள்கை உருவாக்கங்கள் மற்றும் சாதனைகளுக்கு தேவையான வழிகாட்டுதல், உள்ளீடுகளை வழங்கும் என நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பற்றி மக்களவை ஆவணங்கள் கூறுகின்றன.