நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பா.ஜ.க. தலைமை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்வதில் பா.ஜ.க. தலைமை குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

பா.ஜ.க.வின் தற்போதைய எம்.பி.க்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதா வேண்டாமா என்ற குழப்பம்தான் அது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய வேட்பாளர்களுக்கு அதிகளவில் பாஜக தலைமை வாய்ப்பு அளித்தது. இது பாஜகவுக்கு பலனையும் கொடுத்தது. இந்தப் பாணியில் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தந்து, வெற்றிகளை பெறுவது அக்கட்சியின் தலைவர் அமித் ஷா கொள்கையாகவே பின்பற்றிவருகிறார். ஆனால், மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்த பிறகு இந்தப் பாணி தற்போது பாஜகவில் கேள்விக்குள்ளாகியுள்ளது. 

இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக புதிய வேட்பாளர்களை அதிகளவில் களம் இறக்கியிருந்தது. ஆனால், பாஜக தோல்வி அடைந்ததால், 'நாடாளுமன்றத் தேர்தலில், புதியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால், கட்சிக்குள் ஏற்படும் அதிருப்தி, வெற்றி வாய்ப்பை பாதிக்கும்’ என்று கட்சி தலைமைக்கு கவலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், இதற்கு முன்பு பின்பற்றிய பாணியைப் பின்பற்றுவதா அல்லது அதை மாற்றுவதா என்ற குழப்பத்தில் பாஜக தலைமை ஆழ்ந்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் மோடியும் அமித் ஷாவும் மிக கவனமாக செயல்பட வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.