நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று பிரியங்கா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அண்மைக் காலமாக சோனியா காந்தி அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால், அவர் வெற்றி பெற்ற காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது. 

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பிரியங்கா விரும்பவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசத்தைத் தாண்டி நாடு முழுவதும் காங்கிரஸுக்காகப் பிரசாரம் செய்ய பிரியங்கா முடிவு செய்திருப்பதால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸை வலுப்படுத்தும் பணியில் மட்டுமே தற்போது கவனம் செலுத்த பிரியங்கா முடிவு செய்திருக்கிறார். தேர்தலுக்கு பிறகு உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸை வலுப்படுத்தும் பணியில் மட்டும் பிரியங்கா ஈடுபட போவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.