தாமரை தான் ஜெயிக்கப் போகுது! 22 லட்சம் செலவு செய்து கொண்டாட தயாராகும் பாஜக!
21.97 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டர் ஜூன் 3ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படுகிறது. ஆர்டரை முடிக்க ஒப்பந்ததாரருக்கு ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளன. இந்நிலையில், மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதைக் கொண்டாட பாஜக தயாராகி வருகிறது.
தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை டெல்லியில் உள்ள பாரத மண்டபம் அல்லது கடமைப் பாதையில் நடத்த பாஜக திட்டமிடுகிறது. இந்த நிகழ்ச்சி வார இறுதியில் நடத்தப்படலாம் என்றும் அதில் 8,000-10,000 பேர் கலந்துகொள்ள ஏற்பாடு நடப்பதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகளுக்கு முன்னதாக, மே 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிற்கு, அலங்காரப் பொருட்களை வழங்குவதற்கான டெண்டரை ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டது. அதன்படி, 21.97 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டர் ஜூன் 3ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படுகிறது. ஆர்டரை முடிக்க ஒப்பந்ததாரருக்கு ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற வசதிகளை மக்களவை செயலகம் கையாண்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெற்றி விழா நிகழ்வில் ஒலி-ஒளி நிகழ்ச்சி இடம்பெறும் என்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்துகொள்ளக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 மக்களவைத் தேர்தலின் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கணித்துள்ளன. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குறைந்தபட்சம் 295 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதாகக் கூறுகின்றனர்.
ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் கூறுகையில், “...இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போகிறது... கருத்துக்கணிப்புகளில் உண்மை இல்லை... ஜார்கண்டில் எங்கள் நிலைமை நன்றாக உள்ளது. ஜார்க்கண்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்" என்றார்.
பாஜக, மற்ற கட்சிகள் ஆளும் பல மாநிலங்களிலும் தங்கள் பலத்தைக் கூட்டும் வகையில் தேர்தல் முடிவுகள் இருக்கும் என கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைவர்கள் கூறிய 400 என்ற இலக்கை எட்டக்கூடும் என்று எந்த கருத்துக்கணிப்பும் சொல்லவில்லை.