கேரள அரசில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு மாத விலக்கு நேரத்தில் விடுமுறை அளிக்கும் முடிவு, பல்வேறு தரப்புகளின் கருத்துக்களைக் கேட்டபின் எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் தெரிவித்தார்.

ஏற்கனவே கேரளாவில் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சி இதுபோல், தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாத விலக்கு நேரத்தில் விடுமுறை அளிக்கும் திட்டத்தை சமீபத்தில் செயல்படுத்தியது. அதேசமயம், வழக்கமான மாத விடுமுறை நாட்களும் தொடரும் எனத் தெரிவித்தது.

இதை பின்பற்றும் விதமாக கேரள மாநில அரசும் பெண் ஊழியர்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

சட்டசபை நேற்று கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே. எஸ். சபரிநாதன் பேசுகையில், பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு நேரத்தல் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரினார்.

மேலும் பல்வேறு நாடுகளில் பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் விடுமுறை அளிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஜப்பான்,தைவான், இந்தோனேசியா, சீனாவின் பல மாநிலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆதலால், இதை மாநில அரசு சாதகமாக பரிசீலிக்க வேண்டும்.

பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலியில் தொல்லைக்கு ஆளாவது குறித்து நாம் விவாதிக்க வேண்டும். அதேபோல, மாதவிலக்கு நேரத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், “ சமூகத்தில் ஒரு தரப்பினர், பெண் மாதவிலக்கு நேரத்தில் சுத்தமற்ற, புனிதமற்றவர்களாக இருப்பார்கள் என கருதுகிறார்கள். பெண்கள் உடல்ரீதியான பல்வேறு இடர்பாடுகளை மாதவிலக்கு நேரத்தில் எதிர்கொள்கிறார்கள்.

இதனால், இப்போது பெண்களின் மாதவிலக்கு நேரத்தில் அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது விவாதமாகி இருக்கிறது. மாதவிலக்கு என்பது உயிரியல் சுழற்ச்சியா என்பது குறித்து அனைவரும் தீவிரமாக விவாதிக்க வேண்டும்.

பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் விடுமுறை அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நாங்கள் இது  தொடர்பாக பொதுவான கருத்தை எடுப்போம். அனைத்துதரப்பிலான கருத்துக்களையும் கேட்டபின், பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.