ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி அயுப் லெஹாரி எண்கவுண்ட்ரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், பந்தேர்போரா பகுதியில் உள்ள கக்போராவில் 3 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று அதிகாலை சுற்றி வளைத்தனர். அப்போது, திடீரென தீவிரவாதிகள், பாதுகாப்புபடையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும், சிறிய மோர்டார் ரக குண்டுகளை வீசி தாக்கினர்.

இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்புக்கும் நடந்த தீவிரமான துப்பாக்கி சண்டையில், ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதி அயுப் லெஹரி எனத் தெரியவந்தது.

மேலும், இதற்கு முன் கடந்த 14-ந்தேதி ஹண்ட்வாரா மாவட்டத்தில் ஹர்கத் உல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இருவரை பாதுகாப்புபடையினர் கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுண்ட்ரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி முகமூத் கஸ்நவி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.

கடந்த வாரம் சோப்பூர் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நடத்தி அதிரடி சோதனையில் ஜமியா குவாதிம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இஸ்பக் அகமது கான் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.