எப்படியும் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பேராசையில் இருந்த கர்நாடக பாஜக கனவில் மண் விழுந்துவிட்டது. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்டுவந்த 4 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் மீண்டும் காங்கிரஸுக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸைச் சேர்ந்த 4 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட்டனர். இவர்களின் பின்னால் பாஜக இருப்பதாகவும் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் குமாரசாமியைக் கவிழ்க்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. திடீரென பாஜக எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் முகாமிட்டனர். அவர்களோடு காங்கிரஸைச் சேர்ந்த 4 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். 

ஆட்சியைக் கவிழ்க்க சபாநயகருக்கு 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக முதல்வர் குமாரசாமி பாஜக மீது குற்றம் சுமத்தினர். கர்நாடகா அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் 4 எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்ய காங்கிரஸ் சார்பில் சபாநாயகருக்கு கடிதம் அளிக்கப்பட்டது. கர்நாடக அரசியல் கடந்த சில நாட்களாக இப்படி திக்...திக்கென கழிந்து வருகிறது. 

இந்நிலையில் மும்பையில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றனர். பா.ஜ.க.வை நம்பியிருந்தால் வேலைக்கு ஆகாது என காரணத்தால் சட்டசபை கூட்டத்தொடரில் இவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. இவர்களை பார்த்ததும் காங்கிரஸ் - ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து நலன் விசாரித்தனர். நான்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக அழைத்து உள்துறை அமைச்சர் பாட்டீல் பேசினார். 
 
அதிருப்தி எம்.எல்.ஏ.வான முல்பாகல் நாகேஷுடன் அமைச்சர் டி.கே.சிவகுமார் நீண்ட நேரம் பேசினார். பின்னர் அவர் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் சித்தராமையாவை சந்தித்து காங்கிரஸில் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தார். திடீரென அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பியதால்,  கர்நாடக கூட்டணி அரசு தற்காலிகமாக சிக்கல் தீர்ந்திருக்கிறது.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆட்சியைக் கவிழ்க்க ஆர்வம் காட்டி வந்த‘ஆபரேஷன் லோட்டஸ்’ தோல்வியடைந்ததால், பாஜக அதிர்ச்சி அடைந்திருக்கிறது.