வடக்கு கொல்கத்தாவை சேர்ந்த 34 வார கர்ப்பிணிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருகலைப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. 

வடக்கு கொல்கத்தாவை சேர்ந்த 34 வார கர்ப்பிணிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருகலைப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டிலேயே மிக அதிக வாரங்களை கொண்ட கருவை கலைக்க நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றிருப்பது இதுவேயாகும். அந்த கருவிலிருந்து குழந்தைக்கு சரி செய்ய முடியாத உடல்நல பிரச்சனை இருப்பதன் அடிப்படையில் இந்த கருகலைப்பிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

37 வயதாகும் பெண், நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில்,பல்வேறு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்ட பிறகு, கருவிலிருந்து குழந்தைக்கு தீர்க்க முடியாத முதுகெலும்பு பிளவு நோய் இருப்பதாகவும் அக்குழந்தை பிறந்த பிறகும் அதன் முதுகெலும்பு வளர்ச்சியடையாது என்று தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த குழந்தை பிறந்தாலும், அதனால் நகரக்கூட முடியாது,அது ஒரு சில வாரங்களில் உயிரிழக்கும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.இந்த நிலையில்தான் கருகலைப்பு செய்ய கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை நாட்டில் 33 வாரக் கருவை கலைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த வழக்கில் 20 வயது பெண்ணுக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு இருந்து அதனால்,அந்த கருவுக்கு முதுகெலும்பு உருவாவதிலும் பிரச்சனை ஏற்பட்டதால் பாம்பே உயர்நீதிமன்றம் கருகலைப்புக்கு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில்,தற்போது 34 வாரக் கருவை கலைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி ராஜசேகர் மந்தா,நீதிமன்றம் அனுமதி அளித்து மருத்துவமனையில் கருகலைப்பு செய்யும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதனை சந்திக்க தயாரா என்று கேள்வி எழுப்பினர்.இதற்கு கர்ப்பிணி சரி என்று பதிலளித்ததையடுத்து அனுமதி வழங்கினார். 

மேலும் இந்த கருகலைப்பு மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களுக்கு யாரையும் குற்றச்சாட்ட மாட்டோம் என்று கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் கையெழுத்திட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.