மூன்றரை அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் தான் சந்தித்த அத்தனை  சோதனைகளையும் தகர்த்தெறிந்து வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளதை கேரள மாநிலமே அண்ணாந்து பார்க்கிறது. 

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்திலுள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் பிரமிதா அகஸ்டின். இவர் மற்றவர்களை போல் அல்லாமல் தனது லட்சியத்திற்காக அதிகம் போராட வேண்டியிருந்தது. காரணம் அவரின் உடல் வளர்ச்சி. பிரமிதாவின் மொத்த உயரமே 3.5 அடிதான். இதனால் பள்ளிக் காலத்திலேயே சக மாணவர்களால் கேலிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் அந்தச் சம்பவங்கள் எல்லாம் பிரமிதாவை தைரியம், மன உறுதி கொண்ட பெண்ணாகவே மாற்றியிருக்கிறது.பிறக்கும்போது வலிமை குறைந்த எலும்புகளால் பிறந்த பிரமிதாவுக்கு மற்றவர்கள் போல எதையும் எளிதில் செய்ய முடிவதில்லை. அதிக தொலைவிற்கு நடக்க முடியாது. மிகவும் கடினமாக வேலைகளை செய்ய முடியாது. ஏன், மற்றவர்கள் போல அதிக வேகத்தில் தேர்வைகூட எழுத முடியாது. இப்படி பல்வேறு இடர்ப்பாடுகளை தனது பள்ளி, கல்லூரி காலத்தில் சந்தித்திருக்கிறார் பிரமிதா.

பிரமிதாவின் குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம். வறுமை மட்டுமே சூழ்ந்திருந்தாலும் தன் பிள்ளைக்கு கல்வியே மிகப்பெரிய மூலதனம் என நினைத்திருக்கிறார்கள் அவர்களின் பெற்றோர்கள். அதற்காக கஷ்டப்பட்டு படிக்கவும் வைத்திருக்கின்றனர். அப்பா இதய நோயாளி. அம்மா கிட்னி பாதிக்கப்பட்டவர். இதுமட்டுமில்லாமல் வீட்டில் பல்வேறு பொருளாதார நெருக்கடி. ஆனால் இதனை எல்லாம் மனதில் வைத்து இன்று வழக்கறிஞராகி சாதனை புரிந்திருக்கிறார் பிரமிதா.

சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற பிரமிதா அதன்பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். தனது வீட்டுக் கஷ்டம் என எல்லாற்றையும் மனதில் வைத்து படித்த பிரமிதாவுக்கு இயற்கையும் ஒத்துழைக்கவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது வீட்டை இழந்துள்ளார். அதன்பின் நிவாரண முகாம்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளார் பிரமிதா. இப்படி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பயின்ற பிரமிதா தற்போது கேரளா உயர்நீதிமன்றத்தில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பிரமிதா இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

‘இந்த சாதனையோடு என் வாழ்க்கையின் லட்சியத்தை எட்டிவிட்டதாக நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஒரு நல்ல வழக்கறிஞராக நீதியின் பக்கம் நின்று போராடவேண்டும் என்று விருபுகிறேன். ஏனென்றால் என் குடும்பத்தைத் துரத்திய ஒரு  அநீதியால் நாங்கள் 20 ஆண்டு காலம் பாதிக்கப்பட்டிருக்கிறோம்’என்று கேட்பவர்களை நெகிழ வைக்கிறார் பிரமிதா.