kerala organise special assembly meeting

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை விற்பனை, கொள்முதல் செய்ய மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடை உத்தரவு குறித்து விவாதிக்க கேரள அரசு அவசரமாக ஒருநாள் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை வரும் 8-ந்தேதி கூட்டுகிறது.

தடைக்கு எதிர்ப்பு

இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை சந்தையில் விற்கவோ, வாங்கவோ கூடாது என்று மத்திய அரசு கடந்த வாரம் திடீர் தடை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி, பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் போராட்டம்

குறிப்பாக கேரளாவில் இந்த தடை பிறப்பிக்கப்பட்டதில் இருந்தே ஆளும்மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு, காங்கிரஸ் கட்சி ஆகியவை கூட்டாக எதிர்த்து வருகின்றனர். சாலையில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டும், மாட்டிறைச்சி திருவிழா நடத்தியும் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் கடிதம்

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த தடை உத்தரவை வாபஸ் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், பல மாநிலங்களின் முதல்வர்களும் ஒன்று திரட்டும் வகையில் கடிதம் எழுதினார். மக்களின் உணவு உண்ணும் உரிமையில் மத்தியஅரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றச்சாட்டி வருகிறார்கள்.

சிறப்பு கூட்டம்

இந்நிலையில், இந்த தடை உத்தரவு குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை கேரள அரசு கூட்டஉள்ளது. இது குறித்து மாநிலத்தின் வனம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் கே.ராஜூ நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியாவது-

இறுதி முடிவு

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள இறைச்சிக்காக மாடு விற்பனை செய்ய தடை உத்தரவு குறித்து மேற்கொண்டு என்ன செய்யலாம், என்பது குறித்து விவாதிக்க அரசு ஒரு நாள் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தை வரும் 8-ந்தேதி கூட்ட முடிவு செய்துள்ளது. அந்த கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

தனிச்சட்டமா?

இந்த தடை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவதா?, அல்லது மாநிலத்தில் தனியாக சட்டம் இயற்றுவதா? என்பது குறித்து அப்போது விவாதிக்கப்படும். எனினும், சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டு, விவாதித்த பின்பு தான் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தீர்மானம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு மத்திய அரசின் மாடு விற்பனை தடையை நாட்டில் முதன் முதலாக கடுமையாக எதிர்த்தது.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவது போன்றும் இந்த தடை உத்தரவு இருக்கிறது என்று எதிராக குரல் கொடுத்தோம்.இந்த சட்டசபைக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானமும் கொண்டு வரப்படும்.

பதற்றம்

இதற்கிடையே தமிழக-கேரள எல்லையான பாலக்காடு பகுதியில், மாடுகளை ஏற்றிவந்த லாரிகளை சிலர் பிடித்துவைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நடவடிக்கைகள் நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும். பாலக்காட்டில் மட்டுமல்ல நாடுமுழுவதும் பதற்றம் தீவிரமாகும்.

சரியானது

இப்போதுள்ள நிலையில், மாடு விற்பனை தடை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும், அல்லது வாபஸ் பெற வேண்டும் அதுதான் சரியானதாக இருக்கம். மத்திய அரசின் உத்தரவு மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், பால் விற்பனையாளர்கள், அது சார்ந்த துறைகளில் பெரிய பாதிப்பை வருங்காலத்தில் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டு கேரளாவுக்கு 15 லட்சம் மாடுகள் இறைச்சிக்காக கொண்டு வரப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்து 552 கோடி மதிப்பிலான 2.5 லட்சம் டன்மாட்டிறைச்சி விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.