கேரளாவில்  நாளை மறுநாள் 18-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்றும் 18 மற்றும் 19 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு அம்மாநிலத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கேரளாவில் தென் மேற்கு பருவமழை சீசனின்போது வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இடுக்கி, வயநாடு,மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த மழை வெள்ளத்தில் இருந்து கேரளா மாநிலம் மீண்டு வர வெகு காலம் ஆகும் என நினைத்திருந்தனர். ஆனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எடுத்த போர்க்கால நடவடிக்கையால் ஒரு சில மாதங்களிலிலேயே அம்மாநிலம் மீண்டெழுந்தது.

இந்நிலையில் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த மாதம் 8-ந்தேதி தான் தொடங்கியது. தொடக்கத்தில் தீவிரமாக பெய்த மழை அதன்பிறகு படிப்படியாக குறைந்து விட்டது.

.தென்மேற்கு பருவமழை மூலமே கேரளாவுக்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரளாவில் வருகிற 18-ந்தேதி முதல் மீண்டும் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் அறிவித்து உள்ளது.

மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18 மற்றும் 19-ந்தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதேப்போல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்த மழை 18-ந்தேதி முதல் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும் மழையின் போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். சிறையின்கீழ், கோவளம், விழிஞ்சம், வடகரா போன்ற பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.