கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் உணவு பொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், சுத்தமான குடிநீர் கிடைக்காமலும் அவதிப்படுகிறார்கள். இதில் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர், குட்டநாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள காக்கி, அனதோடு, கொச்சு பம்பா உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டதால்  செங்கனூர், குட்டநாடு போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே இந்தப் பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்கனவே 50 பேர் பலியாகிவிட்டார்கள்.

இதனிடையே அப்பகுதியில்  வெள்ள நிலைமை மோசமாகிக் கொண்டு இருப்பதால் உதவி கேட்டு செங்கனூர் எம்.எல்.ஏ. சாஜி செரியன் கதறி அழுதவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வீடியோ பதிவில் , செங்கனூர் பகுதியில் மிகவும் காலதாமதமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறது. இதை துரிதப்படுத்தாவிட்டால் நிறையபேர் உயிரிழக்க நேரிடும்.

உணவு பொருள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். கூடுதலாக உணவுபொருள் அனுப்ப வேண்டும். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தயவு செய்து இங்கு ஹெலிகாப்டர்களை அனுப்பி வையுங்கள் என கதறி அழுதபடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.