வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கேரளாவின் 11 மாவட்டங்களில் பெருமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கித் தவிக்கும் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். 

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த 8ஆம் தேதியிலிருந்து அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள எல்லா அணைகளும் நிரம்பி வழிகின்றன. பெருமழையால் 14 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 10 நாட்களாகப் பெய்துவரும் பெருமழையால் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,094 முகாம்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்து 14 ஆயிரத்து 391 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புப் படை, விமானப் படை, கடற்படை, ராணுவம், தீயணைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கேரளாவில் 11 மாவட்டங்களில் மீண்டும் மிகப் பெருமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், “திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோடு மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் தொடர்ந்து மிகக் கனமழை நீடிக்கும். வடமேற்கு வங்கக் கடல் அருகே அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதனால், 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் தேதியன்று, கேரளாவின் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை மையம். தற்போது, மீண்டும் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தால் தத்தளிக்கும் கேரள மக்களிடையே, இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.