தமிழகத்தில் கரையைக் கடந்து சேதம் ஏற்படுத்திய கஜா புயல் தற்போது கேரளாவுக்கு சென்றுள்ளது. இதனால் கேரளாவில் பல்வேறு இடங்களில் மழை மிரட்டும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் வேலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளது. 

நாகப்பட்டினத்துக்கும் வேதாரணியத்துக்கும் இடையே நேற்று இரவு கரையைக் கடந்த கஜா புயல் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி மதுரைக்கு வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக இருந்தது. இது மேலும் மேற்குநோக்கிக் கேரளத்துக்கு நகர்ந்து செல்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிகப் பலத்த மழை பெய்யும் என்றும், வடக்கு உட்புறப் பகுதிகளில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. வேலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும். மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. 

கேரளத்திலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை முதல் மிகப் பலத்த மழை வரை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீட்டர் முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.