தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக எந்தவொரு பணியை மேற்கொண்டாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது நாட்டில் வழக்கமாக குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிக்கும் பதிவேடாகும். கடந்த மாதம் 24ம் தேதி சென்செக்ஸ் 2021 மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 பணிகளுக்காக நிதி கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணிகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில், பிரனாய் விஜயன் தலைமையிலான கேரள மற்றும் மம்தா பானர்ஜி தமையிலான மேற்கு வங்க அரசுகள் தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தன. இந்த சூழ்நிலையில் கேரள அரசு ஒரு படி மேலே போய், அந்த மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என மிரட்டியுள்ளது.


இது தொடர்பாக கேரள அரசின் பொது நிர்வாக துறையின் முதன்மை செயலர் கே.ஆர்.ஜோதிலால் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக எந்தவொரு பணிகளும் மேற்கொள்ளவில்ல என்பதை உறுதி செய்ய வேண்டும். மாநில அரசின் உத்தரவை மாவட்ட அதிகாரிகள் பின்பற்றவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.