ஹிஜாப் விவகாரத்தில் இத்தகைய பிரச்சனை ஏற்பட ஒரு சிறு பிரிவினரின் பிற்போக்கு மனநிலையின் விளைவே காரணம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் அளித்துள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் இத்தகைய பிரச்சனை ஏற்பட ஒரு சிறு பிரிவினரின் பிற்போக்கு மனநிலையின் விளைவே காரணம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஹிஜாப் ஆடை அணிந்துவர தடை விதிக்கப்பட்டது. பள்ளி சீருடை அணிந்துவர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்தனர். இது கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளிம் கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட சில பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஹிஜாப் இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கமல்ல. ஹிஜாப் என்ற வார்த்தை 7 முறை மட்டுமே குரானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் உடை ரீதியிலான கோணத்தில் கூறப்படவில்லை. ஹிஜாப் என்பது பெண்களின் உடை என குரானில் குறிப்பிடப்படவில்லை.
இஸ்லாமில் ஹிஜாப் அத்தியாவசியமானது அல்ல. ஹிஜாப் விவகாரத்தில் இத்தகைய பிரச்சனை ஏற்பட ஒரு சிறு பிரிவினரின் பிற்போக்கு மனநிலையின் விளைவே காரணம். ஹிஜாப் என்பதும் புர்கா என்பதும் ஒன்றல்ல. இரண்டும் ஒரு வகையான உடையே தவிர இஸ்லாமிய விதியில் ஹிஜாப் அவசியமென எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஹிஜாப் என்பது பெண்களின் உடை என குரானில் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். ஹிஜாப் விவகாரம் பூதாகரமாய் வெடித்த நிலையில் தற்போது அதுப்பற்றிய ஆளுநரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
