தமிழகக் குடிநீர் தேவைக்காக 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க கேரள அரசு முன்வந்த நிலையில், அதை ஏற்க தமிழக அரசு மறுத்துள்ளதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தண்ணீருக்காக மக்கள் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் 3 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டுவருகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறையால் ஓட்டல்கள், உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பல ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்திவிட்டன. ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அல்லாடிவருகிறார்கள்.


இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றக்குறையைக் கருத்தில்கொண்டு கேரள அரசு தமிழகத்துக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க முன்வந்ததை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட முகநூல் பதிவு மூலம் தெரியவந்துள்ளது. இன்று அவர் வெளியிட்ட முகநூல் பதிவில், “தமிழகம் கடும்  தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. கேரள அரசு ரயில் மூலம் திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குக் குடிநீரை அனுப்ப முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் அலுவலகத்தை கேரள முதல்வர் அலுவலகம் தொடர்புகொண்டது. ஆனால். தண்ணீர் தேவை எழவில்லை என்ற தமிழக முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தாமாக உதவி செய்ய முன்வந்ததை தமிழக அரசு மறுத்துள்ளது பினராயி விஜயனின் முக நூல் பதிவு மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். அந்த அடிப்படையிலேயே கேரள அரசின் உதவிக்கும் தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கேரள அரசின் உதவியை தமிழக அரசு நிராகரித்தது சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.