நாளை முதல் கொச்சியில் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொச்சி கடற்படை தளத்தில் உள்ள விமான நிலையத்தை வர்த்தக விமான சேவைக்கு பயன்படுத்த முடியுமா என்பதை சோதனை முறையில் விமானத்தை அனுப்பி பரிசோதிக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அதன் கிளை நிறுவனமாக ஏர் இந்தியா அலையன்ஸ் விமானத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 

கேரளாவில் பெய்து வரும் பருவமழை காரணமாக கொச்சி விமான நிலையம் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதன் காரணமாக கொச்சி விமான நிலையம் 26-ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கொச்சியில் இருந்து விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. கேரளாவில் மழை சற்று குறைந்துள்ளதையடுத்து கொச்சி கடற்படை விமான தளம் மூலம் திங்கள்கிழமை முதல் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு டுவிட்டர் பக்கத்தில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா அலையன்ஸ் மூலம் பெங்களூரு - கொச்சி இடையே கொச்சி கடற்படை விமான தளம் மூலம் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் விமானப் போக்குவரத்தை துவங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் இருந்தும் விமான சேவை தொடங்கப்படுகிறது. மற்ற விமான நிறுவனங்களும் இந்த சேவையில் இணைவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.