kerala denied to close the wine shops
தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த 3 மாதம் அவகாசம் கேட்க கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக விரைவில் உச்ச நீதிமன்றத்தை அனுகி அனுமதி பெறவும், கேரள அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டுவரும் மதுக்கடைகளை ஏப்ரல் 1-ந்தேதி முதல் அகற்றி 500 மீட்டருக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். 20 ஆயிரத்துக்கும் மக்கள் தொகை குறைவாக நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் கிராமங்களில் 220 மீட்டருக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும்’’ எனத் தெரிவித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கேரள மாநில அரசுக்கு கிடைக்கும் கலால் வரியாக ரூ. 4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என மாநில அரசு தெரிவித்தது.
மேலும், மாநிலத்தில் உள்ள 1,956 மதுக்கடைகளை மூட வேண்டிய சூழ்நிலையும் எழுந்துள்ளது. ஓட்டல், மதுபார்கள், மதுக்கடைகளில் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கலால்வரித்துறை அமைச்சர் ஜி. சுதாகரன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், கலால்வரி ஆணையர் ரிஷி ராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, பல மதுக்கடைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டி இருப்பதால், அதற்கு அதிகமான காலநேரம் தேவைப்படும் என்பதால், உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் நேற்று திருவனந்தபுரத்தில் கூறுகையில், “ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் அமல்படுத்தினால் விற்பனை மற்றும் கலால்வரி மூலம் எங்களுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.
கேரள போன்ற சிறிய மாநிலத்தில் மதுக்கடைகளை உடனடியாக இடம் மாற்றுவது என்பது சாத்தியமில்லாதது. மிகவும் கடினமான பணியாகும்.
அதுமட்டுமல்லாமல், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் சொகுசு ஓட்டல்கள், சுற்றுலா ஓட்டல்கள் என அனைத்தும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
கலால்வரித்துறை அமைச்சர் ஜி. சுதாகரன் கூறுகையில், “ மற்ற மாநிலங்களில் இருந்து கேரள மாநிலம் வேறுபட்டது. இங்கு மதுக்கடைகளை உடனடியாக இடம் மாற்றுவது சாத்தியமில்லாதது. இதற்கு கால அவகாசம் தேவை. அதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும்’’ என்றார்.
