ஆட்டோவில் சென்ற பெண் ஒருவர், மீதி சில்லறைக் கேட்டதற்காக அந்த பெண்ணை கடுமையாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலுவா  நகர் ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி நீது (37). இவர் சட்டம் பயின்று வருகிறார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் ஆலுவா நகருக்கு சென்றார்.

இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கும் செல்லும் அவர், வாகனம் நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருகிறார். வண்டி நிறுத்துமிடத்துக்கும் பேருந்து நிலையத்துக்கும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்து ஆலுவா நகருக்கு பேருந்தில் வந்திறங்கிய அவர், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்துக்கு ஆட்டோவில் சென்றார். அப்போது, ஆட்டோ கட்டணம் 40 ரூபாய் என்று ஓட்டுநர் கூறிய நிலையில், தன்னிடம் 35 ரூபாய்தான் உள்ளது என்று நீதி கூறியுள்ளார்.

ஆட்டோ கட்டணம் 40 ரூபாய் முழுமையாக வேண்டும் என்று ஓட்டுநர் கூறிய நிலையில், நீது 500 ரூபாய் நோட்டை ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சில்லரை இல்லாத காரணத்தால், நீதுவை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கடைக்கு சென்று சில்லறை மாறியுள்ளார். 

சில்லறை மாற்றிய ஆட்டோ ஓட்டுநர், நீதுவிடம் 450 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மீதி 10 ரூபாய் என்று நீது கேட்டபோது, 10 ரூபாய் இல்லை என்று ஓட்டுநர் கூறியுள்ளார்.

அதற்கு நீது, 5 ரூபாய் இல்லை என்று கூறியதற்கு மறுத்த நீங்கள், 10 ரூபாயை அபகரிக்க நினைக்கிறீர்களே நியாயமா என்று கேட்டுள்ளார். இதில் ஆட்டோ ஓட்டுநருக்கும் நீதுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், நீதுவை ஆட்டோவில் கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து கீழே தள்ளி உள்ளார். சாலையில் தள்ளிவிட்ட நீதுவின் முகத்தை, தனது காலால் பலமாக அழுத்தி உள்ளார். அவரின் தலை முடியைப் பிடித்து தூக்கி கன்னத்தில் அறைந்துள்ளார். அது மட்டுமல்லாது அவரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளார்.

இதில் நீதுவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது பற்களும் உடைபட்டன. ஆட்டோவின் எண்ணை குறித்துக் கொண்ட நீது, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். நீதுவின் புகாரை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐந்து ரூபாய் சில்லரைக் கேட்ட காரணத்துக்காக சட்டக்கல்லூரி மாணவி தாக்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.