குஜராத் முதலமைச்சராக திரு. நரேந்திர மோடி இருந்தபோது ஆதித்யா பிர்லா நிறுவனத்திடம் இருந்து ரூ. 25 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளாா்.

நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 8ம் தேதியன்று ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் இருந்ததால் மக்கள் அனைவரும் அடிப்படை தேவைக்களுக்கே பணமின்றி தவித்தனர். 

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது ஆதித்யா பிர்லா நிறுவனத்திடமிருந்து ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2013ம் ஆண்டு சோதனை நடத்தியதாகவும், அப்போது குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு ரூ.25 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். 

ஆதித்யா பிர்லா நிறுவனத்திற்கு சாதகமாக நடந்துகொள்வதற்காக இந்த லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதா என அரவித் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஏற்கெனவே ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியிருப்பதாக எழுந்திருக்கும் குற்றசாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுதந்திர இந்தியாவில், ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஒருவர் மீது கருப்பு பண புகார் மற்றும் லஞ்ச புகார் எழுவது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார்.