Kashmir is ours and NDA govt will bring its permanent solution

ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

சர்வதேச போர் ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்தையும் ஊக்கவித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவ முகாம் தாக்கப்பட்டதால் வெகுண்டெழுந்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத பதுங்கிடங்களை சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலமாக தரைமட்டமாக்கியது.

இந்த வலிமையான தாக்குதலுக்குப் பிறகும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது நின்றபாடில்லை. நவ்ஹாம் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

இச்சம்பவம் நடைபெற்ற சில மணிநேரங்களிலேயே அதே நவ்ஹாம் பகுதியில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பல மணி நேரம் நடைபெற்ற இச்சண்டையில் மேலும் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணத்தை தழுவினார். 

தீவிரவாதிகளின் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில்,இப்பிரச்சனைகளுக்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.

சிக்கீமில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ளாவிட்டால், வலுக்கட்டமாயக அதனை இந்தியா திருத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

தற்போதைய காலகட்டத்தில் எந்தவொரு நாடும் பிற நாட்டுக்கு தேவையில்லாத வீண்பிரச்சனைகளை தந்து கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், சர்வதேச சமூகமும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றார்.