ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததால், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வதும், காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவதும் நின்றுவிட்டது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்து , திரும்பப் பெற்றது கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை மட்டுமல்ல, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நடவடிக்கையும் கூட என்று மத்திய அரசு ஏற்கனவே விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், மும்பையில், நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகையில், “ ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவதற்கு ரூ. 500, வேறுவிதமான வன்முறையில் ஈடுபடுவதற்கு ரூ.1000 என பிரிவினைவாதிகள் கொடுத்து வந்தனர்.
பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தபின், இந்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதிகிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப்பின், காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசு சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. இதற்கான உறுதியான நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எல்லைபாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு எதுவானாலும் நமது பிரதமர் துணிச்சலுடன் முடிவு எடுத்து, செயல்படுத்தி வருகிறார். நாட்டில் எழுந்துள்ள ரூபாய் நோட்டு பிரச்சினை விரைவில் சீராகும் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.
