கர்நாடகாவில் சட்டபேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பங்கேற்காதது மீண்டும் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 37 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க, மஜதவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியையும் அவர்களுக்கு காங்கிரஸ் கொடுத்தது. கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கூட்டணி ஆட்சியில் தொடர்ச்சியாக சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அமைச்சர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே பலர் குமாரசாமி தலைமையிலான அரசை ஏற்றுக்கொள்ள முடியாது, சித்தராமையா தான் தங்களுக்கு முதலமைச்சர் என்று கூறியிருந்தனர். இதனால் கடும் கோபமடைந்த முதல்வர் குமாரசாமி பதவியில் இருந்து விலக தயார் என கூறினார். இதனையடுத்து சித்தராமையா பேசி ஒருவழியாக அதனை சமாளித்தார். 

இந்நிலையில் தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் வஜுபாய் வாலா உரையாற்றினார். கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை' எனக் கூறி, பா.ஜ.க உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் உரையை 3 நிமிடத்திலேயே முடித்து விட்டார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் என 7 எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளனர். அவர்களை தவிர மேலும் 11 எம்.எல்.ஏ.,க்கள், சட்டப்பேரவைக்கு வரவில்லை. ஆகையால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. கூட்டணி அரசுக்கு பெருபான்மை இல்லை என்று கூறி வரும் பாஜகவுக்கு, கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா பதிலடி கொடுத்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயார் என பரமேஸ்வரா கூறியுள்ளார்.