நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வருகிறேன். தற்போது இதை அகற்றும்படி கூறுவதால் எனது விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன். மதம்சார்ந்த உரிமைகளை பின்பற்ற அரசியலமைப்பு சட்டம் அனுமதிப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஜனநாயகமற்ற உங்களின் செயலை கண்டிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி விரிவுரையாளர் தனது பணியை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து, விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 14ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில இடங்களில் மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புக்ரா, ஹிஜாப் உடைகளை அணிந்து வந்ததால் அவர்களை பள்ளி, கல்லூரிகளுக்குள் நுழைய கல்வி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனால், சில பகுதிகளில் மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஹிஜாப் அகற்ற கூறும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள கல்லூரியின் விரிவுரையாளர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்;- துமகூரு நகரில் ஜெயின் பியூ கல்லூரியில் ஆங்கில துறையில் விரிவுரையாளராக பணியாற்றியவர் சாந்தினி. இவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக கூறி கல்லூரி முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வருகிறேன். தற்போது இதை அகற்றும்படி கூறுவதால் எனது விரிவுரையாளர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன். மதம்சார்ந்த உரிமைகளை பின்பற்ற அரசியலமைப்பு சட்டம் அனுமதிப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஜனநாயகமற்ற உங்களின் செயலை கண்டிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
