கல்லூரி வளாகத்தில் ஜெய்பீம் கோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். அதேவேளையில் காவித் துண்டு அணிந்த மாணவர்களும் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி கல்லூரிக்குள் வலம் வந்தனர்.

கர்நடாகவில் ஹிஜாப் விவகாரத்தில் போராடி வரும் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக நீலத் துண்டு அணிந்து வந்து மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர். 

பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும் என்றும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த மாணவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், கர்நாடகாவில் சர்ச்சை உருவாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு மங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவ , மாணவிகள் சிலர் காவித் துண்டு அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்தால் காவி துண்டு அணிவோம் என்றும் இந்து மாணவிய, மாணவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களிலும் இதே சம்பவம் நடந்தேறியது.

இதனையடுத்து கர்நாடகாவில் 11-12ஆம் வகுப்புகளில் படிக்கும் பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து வரிசையாக தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமிய மாணவிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதே வேளையில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஆப்சென்ட் போடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் குண்டபுராவில் கல்லூரிக்குள் செல்லாதவாறு தடுத்து நிறுத்தப்பட்ட இஸ்லாமிய மாணவிகளின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப் பொருளானது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். பல அரசியல் கட்சித் தலைவர் இந்த விவகாரத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கல்லூரிகளின் உத்தரவுகளை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களில் இன்னொரு பிரிவினர், கல்லூரிகளுக்கு நீலத் துண்டை அணிந்து வந்தனர். அவர்கள் ஹிஜாப் அணிவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். 

மேலும் கல்லூரி வளாகத்தில் ஜெய்பீம் கோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். அதேவேளையில் காவித் துண்டு அணிந்த மாணவர்களும் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி கல்லூரிக்குள் வலம் வந்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் தொடர்ந்து நீண்டுக்கொண்டிருக்கும் நிலையில், நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் விசாரணையில் மூலம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.