Karnataka govt Released jayalalithaa assets case expenses
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா , சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது தொடர்பாக , வழக்கறிஞர்களுக்கு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கர்நாடக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அந்த வழக்கில் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் சொத்து குவிப்பு வழக்கில் எவ்வளவு செலவானது என்பது குறித்த விவரங்களை தரும்படி, நரசிம்ம மூர்த்தி என்ற ஆர்.டி.ஐ., ஆர்வலர், கர்நாடக அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து இருந்தார்.

இதற்கு, அட்வகேட் ஜெனரல் அலுவலகம், பதில் அளித்துள்ளது. அதில் , இந்த வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வுக்கு 95 லட்சம் ரூபாயும்; மூத்த வழக்கறிஞரும், சிறப்பு அரசு வழக்கறிஞருமான பி.வி.ஆச்சாரியாவுக்கு, 1 கோடியே 6 லட்சம் ரூபாயும்; வழக்கறிஞர்கள் ஜோசப் அரிஸ்டாட்டிலுக்கு 32 லட்சம் ரூபாயும், சந்தோஷ் சவுதாவுக்கு 42 லட்சம் ரூபாயும், கர்நாடக அட்வகேட் ஜெனரல் மதுசூதனன் ஆர் நாய்கிற்கு 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
