கர்நாடகாவில் மாணவர்களின் புத்தகப் பை எடை எவ்வளவு இருக்க வேண்டும்? கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
மாணவர்களின் உடல் எடையில் புத்தகப் பையின் எடை 15%க்கும் மேல் இருக்கக் கூடாது என்று கர்நாடக அரசு பள்ளிகளுக்கு மீண்டும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பள்ளிப் பையின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட எடை மாணவர்களின் எடையில் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு கர்நாடாக கல்வித்துறை புது உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியும் கடைபிடிக்க வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள பள்ளிகள் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுமாறு வலியுறுத்தி, கர்நாடகாவில் உள்ள பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை புதன்கிழமை பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டின் சுற்றறிக்கையை மீண்டும் வெளியிட்டது. உத்தரவை கண்டிப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று தொகுதி அளவிலான கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, புத்தகப் பையின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட எடை மாணவர்களின் எடையில் 15 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 1 முதல் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 1.5-2 கிலோவாகவும், 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 முதல் 3 கிலோவாகவும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 முதல் 4 கிலோவாகவும், 9 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 முதல் 5 கிலோவாகவும் புத்தகப் பை எடை இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.